ஆணைக்குழுவில் பதிவு செய்யப்படாத கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட தொடர்பாடல் சாதனங்களைப் பயன்படுத்துவது எதிர்காலத்தில் நாட்டில் தடை செய்யப்படும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) தெரிவித்துள்ளது.
TRCSL பணிப்பாளர் நாயகம், எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) பந்துல ஹேரத், இலங்கைக்கு சட்டவிரோதமான தகவல் தொடர்பு சாதனங்களை இறக்குமதி செய்வதை நிறுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என்று தெரிவித்தார்.
அதன்படி, இந்த மாத இறுதிக்குள் இதற்கான சிறப்பு முயற்சியை அறிமுகப்படுத்த TRCSL திட்டமிட்டுள்ளது.
எவ்வாறாயினும், தற்போது பாவனையில் உள்ள கையடக்க தொலைபேசிகளுக்கு புதிய வேலைத்திட்டம் பாதிப்பை ஏற்படுத்தாது என பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த TRCSL பணிப்பாளர் நாயகம், “நாட்டு மக்கள் முறையான தரத்தை பூர்த்தி செய்யாத சட்டவிரோத தகவல் தொடர்பு சாதனங்களை கொள்வனவு செய்வதன் மூலம் பல்வேறு சிரமங்களுக்கும் தடைகளுக்கும் முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. அத்தகைய சாதனங்களை நுகர்வோருக்கு விற்பனை செய்வதைத் தடுப்பது எங்கள் நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பாகும். இதற்கு தீர்வு காணும் வகையில், இம்மாத இறுதிக்குள் தானியங்கி முறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், நாட்டிற்குள் சட்ட விரோதமாக மொபைல் போன்கள் இறக்குமதி செய்வதை நிறுத்துவதுமே இதன் நோக்கமாகும்.
இந்த முறையின் கீழ், தற்போது பாவனையில் உள்ள எந்தவொரு கையடக்கத் தொலைபேசிகளும் தடை செய்யப்படாது எனவும், வெளிநாட்டவர்கள் தமது கையடக்கத் தொலைபேசி சாதனங்களைப் பயன்படுத்துவதற்கு எந்தத் தடையும் இருக்காது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.