பதில் பொலிஸ் மா அதிபருடனான பேச்சுவார்த்தை வெற்றியளித்ததையடுத்து, நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்தத்தை கைவிடுவதற்கு பஸ் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
‘கிளீன் ஸ்ரீலங்கா’ தேசிய முன்முயற்சியுடன் தொடர்புடைய போக்குவரத்து நடவடிக்கைகள் தொடர்பில் இன்று (08) தனியார் பஸ் சங்கங்களுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கும் இடையில் இடம்பெற்ற வெற்றிகரமான கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளவிருந்த வேலைநிறுத்தத்தை கைவிடுவதற்கு பஸ் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
முன்னதாக, பயணிகள் போக்குவரத்து பேரூந்து நடத்துனர்கள் மீது பொலிஸ் திணைக்களத்தின் அதீத மற்றும் தேவையற்ற அழுத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் நேற்று (07) வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க பஸ் சங்கங்கள் தீர்மானித்திருந்தன.
இந்நிலையில், பஸ் சங்கங்களின் பிரதிநிதிகள் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுடன் இன்று (08) காலை பொலிஸ் தலைமையகத்தில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
பதில் பொலிஸ் மா அதிபருடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுப்பதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்களுக்கும் பதில் பொலிஸ் மா அதிபருக்கும் இடையில் இன்று கலந்துரையாடப்பட்டதன் பிரகாரம், பஸ்களில் உள்ள தேவையற்ற மேலதிக உபகரணங்களை அகற்றுவதற்கு தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.