சீரற்ற காலநிலையினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உடனடியாக நிவாரணம்


அண்மைய சீரற்ற காலநிலையினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.

மீனவ சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை மதிப்பிடுவதற்காக பொத்துவிலுக்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர், அண்மைய அனர்த்தம் நாடு முழுவதிலும் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள சமூகங்களுக்கு கணிசமான இன்னல்களை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

"இந்தப் பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர், 16 மீன்பிடிக் கப்பல்கள் அழிக்கப்பட்டன மற்றும் ஏராளமான குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்" என்று கமகே கூறினார். 

பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான உதவிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.  

பாதிக்கப்பட்ட குடும்பங்களை அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு அனுப்பி வைக்குமாறு பிரதேச மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும், சேதமடைந்த மீன்பிடி படகுகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இன்று (02) ஆரம்பமாகவுள்ள கடும் மழையினால் சேதமடைந்த வீதிகள் மற்றும் பாலங்கள் தொடர்பான தகவல்களை சேகரிக்கும் வேலைத்திட்டத்தை வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) ஆரம்பித்துள்ளது. தீவு முழுவதிலும் உள்ள உட்கட்டமைப்புகளுக்கு விரிவான சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன என்று RDA தெரிவித்துள்ளது.  

இதன்படி, பாதிக்கப்பட்ட வீதிகளின் விரிவான மதிப்பீடுகள் முன்னுரிமையளித்து திருத்தப்பணிகளை துரிதப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எஸ்.எம்.பி.சூரியபண்டார உறுதிப்படுத்தினார்.  

சீரற்ற காலநிலையினால் சேதமடைந்த மனம்பிட்டிய – அரலகங்வில வீதி திருத்தப் பணிகளை மேற்கொண்டு போக்குவரத்துக்காக ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புதியது பழையவை