சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் திருத்தப்பட்ட நிபந்தனைகள் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படும் என சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மீதான விவாதத்தின் போதே ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.
“அடுத்த மூன்று ஆண்டுகளில் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பிற்குள் நாங்கள் பணியாற்ற வேண்டும் என்று நாங்கள் கூறினோம். அதற்குள், திருத்தங்களைச் செய்யலாம் என நம்புகிறோம். ஆம், நாங்கள் திருத்தங்களைச் செய்துள்ளோம். அவர்களுடன் கலந்துரையாடி திருத்தங்களை முன்வைத்துள்ளோம். பட்ஜெட் மூலம் அந்த திருத்தப்பட்ட விதிமுறைகளை நாட்டு மக்கள் அறிந்து கொள்வார்கள்” என்று விளக்கினார்.
வற் வரியை குறைப்பதாக அரசாங்கம் பொய் கூறியதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கூற்றுக்கு உரையாற்றிய ரத்நாயக்க, உண்மையில் VAT குறைக்கப்படும் என குறிப்பிட்ட அவர், எந்தவொரு வரி குறைப்பும் பாராளுமன்ற சட்டமூலத்தின் ஊடாகவே அமுல்படுத்தப்பட முடியும் எனவும் அவர் மேலும் விளக்கினார்.
வரவு செலவுத் திட்டத்தில் இருந்து VAT குறைப்பு தொடர்பிலான முதலாவது திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவைத் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.