பொலன்னறுவை பிரதேசத்திலுள்ள அரிசி ஆலைகளில் இன்று (08) விசேட பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை அறிவித்துள்ளது.
இதன்படி, நாளாந்த அரிசி உற்பத்தி, தற்போதைய கையிருப்பு நிலைகள் மற்றும் சந்தைக்கு வெளியிடப்படும் அரிசியின் அளவு குறித்து அறிக்கை பெறப்படும் என பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய எதிர்காலத்தில் அனைத்து அரிசி ஆலைகளிலிருந்தும் தகவல்களை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிஏஏ தெரிவித்துள்ளது.
இதேவேளை, அரிசி வியாபாரிகளுடன் நேற்று (07) இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, பல்வேறு அரிசி வகைகளுக்கான புதிய அதிகபட்ச சில்லறை மற்றும் மொத்த விலை வரம்புகளை ஜனாதிபதி திஸாநாயக்க நிர்ணயித்துள்ளார்.
இன்று முதல், அனைத்து அரிசி ஆலைகளையும் உன்னிப்பாகக் கண்காணிக்கவும், நிர்ணயிக்கப்பட்ட விலைகளுக்கு இணங்கத் தவறும் உரிமையாளர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தவும் CAA அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி அறிவித்தார்.