பயங்கரவாதக் குழுவொன்றிற்கு நிதி சேகரித்து விநியோகித்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 43 வயதான பிரித்தானிய பிரஜை ஒருவரை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கிளிநொச்சியைச் சேர்ந்த சந்தேக நபர் 2009ஆம் ஆண்டு இலங்கையை விட்டு வெளியேறி பிரித்தானிய குடியுரிமையைப் பெற்றுள்ளார்.
நவம்பர் 30, 2024 அன்று கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்தவுடன் கைது செய்யப்பட்டார்.
கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரின் வேண்டுகோளுக்கு இணங்க கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடைக்கு அமைய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் குறித்த நபரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து சந்தேக நபர் விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ஐக்கிய இராச்சியத்தில் தங்கியிருந்து நிதி திரட்டியதாகவும், கொழும்பு மற்றும் வன்னிப் பிரதேசத்தில் உள்ள நபர்களுக்கு பணம் அனுப்பியதாகவும் சந்தேக நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு-வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினருடன் இணைந்து விமான நிலைய பொலிஸார் தற்போது மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.